சேலம் : சேலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பார்க்க விடாமல் தடுக்கும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் புகார் அளித்தார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், தாதகாப்பட்டி வேலுநகர் பகுதியைச் சேர்ந்த அமுதா (49) என்பவர் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் டைலர் வேலை செய்து வருகிறேன்.
எனது கணவர் முத்துசாமி கொரோனா காலத்தில் உயிரிழந்தார். எனக்கு கிருஷ்ணப்பிரியா (21) மற்றும் மீரா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில், கிருஷ்ணப்பிரியா கடந்த 2022ம் ஆண்டு கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் அவ்வப்போது கிருஷ்ணப்பிரியா செல்போனில் பேசி வந்தார். நேரிலும் சந்தித்து பேசியுள்ளேன்.
இதனிடையே, கடந்த 5மாதமாக கிருஷ்ணப்பிரியாவிடம் இருந்து போன் ஏதும் வரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து கன்னங்குறிச்சிக்கு நேரில் சென்றாலும், எனது மகளை பார்க்க விடாமல் கணவர் குடும்பத்தினர் தடுக்கின்றனர். இதனால் மகள் கிருஷ்ணப்பிரியா உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் தவிக்கிறேன். இதுகுறித்து விசாரித்து, மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
The post காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பார்க்க விடாமல் தடை போடும் மருமகன் appeared first on Dinakaran.