புதுவையில் அடுத்த பொதுத்தேர்தலில் 4 முனை போட்டி உருவாக வாய்ப்பு

புதுச்சேரி, டிச. 10: புதுவையில் தனித்தனியாக உருவாகும் அரசியல் கோஷ்டிகளால் அடுத்து வரவுள்ள பொதுத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. என்ஆர் காங்கிரஸ், பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. பிரதான எதிர்க்கட்சியாக திமுக உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதிமுகவில் தனித்தனி கோஷ்டிகள் உள்ளது. பாமக தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டினை மாற்றி வருகிறது.

இதனிடையே ஆளும் கூட்டணியில் அதிருப்தியில் உள்ள பாஜக எம்எல்ஏக்களான ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்டு மற்றும் சுயேட்சைகளான அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி அசோக் னிவாஸ் உள்ளிட்டோர் தனி கோஷ்டியாக உருவெடுத்துள்ளனர். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனின் தலைமையில், வரும் தேர்தலில் தனி அணியாக களமிறங்கும் முடிவில் இக்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்திய நேரு என்ற குப்புசாமி எம்எல்ஏ, பாஜக முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த வாரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

இதில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நபரை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும், மாநில மக்களின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் நபர் அதிகாரத்தில் வர வேண்டும், அதிமுக தலைமையில் மாற்றம் வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அடுத்து வரவுள்ள பொதுத்தேர்தலில் தனி அணியாக களமிறங்கலாமா? என்ற ஆலோசனையிலும் மூவர் குழு ஈடுபட்டு வருகிறதாம். இதற்காக அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளால் அடுத்தாண்டு வரவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்புள்ளதால் அரசியல் களமும் விறுவிறுப்பை எட்டி வருகின்றன.

The post புதுவையில் அடுத்த பொதுத்தேர்தலில் 4 முனை போட்டி உருவாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: