ஆரா: பீகாரில் பக்தர்களுடன் கோயிலிலிருந்து சென்ற வாகனத்தின் ஓட்டுநர் மீது துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்ட நிலையிலும், பயணிகளைக் காப்பாற்றுவதற்காக 5 கி.மீ. வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரின் தீரத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் ஹேமத்புர் பகுதியை சேர்ந்த ஜீப் ஓட்டுநரான சந்தோஷ் சிங், அப்பகுதியில் இருக்கும் கோயிலுக்கு பக்தர்களை ஜீப்பில் ஏற்றிச்சென்றுவிட்டு திரும்புகையில், பைக்கில் விரட்டி வந்த 2 பேர் டிரைவர் சந்தோஷ்சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இதனால் அவரது வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்தம் கசிந்த நிலையில், அவர் ஜீப்பில் இருந்த 15 பயணிகளை அப்படியே விட்டுவிடாமல், 5 கி.மீ. தொலைவுக்கு ஜீப்பை வேகமாக ஓட்டிச் சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார். ஆனால், வயிற்றில் பாய்ந்த குண்டு அவரது குடல் பகுதிகளை கடுமையாக சேதமடையச் செய்துவிட்டதால், அவர் உயிருக்குப் போராடினார்.அப்பகுதியை சேர்ந்த சிலர் சந்தோஷ் சிங்கை, ஆரா மருத்துமனையில் அறுவை சிகிச்சைக்குப்பின்னர் அவரது வயிற்றில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது அவர் உயிர் பிழைத்துள்ளார்.
இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று ஜகதீஷ்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ராஜீவ் சந்திர சிங் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அதே நாளில் மற்றொரு வாகனத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது கண்டறியப்பட்டது. எனவே அவர்களின் ஓவியங்களை வரைந்து அதன் அடிப்படையில் கிராமம், கிராமமாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
The post பீகாரில் உருக்கமான சம்பவம் துப்பாக்கி குண்டு பாய்ந்த பிறகும் 15 பேரை காப்பாற்றிய டிரைவர்: 5 கிமீ தூரம் ஜீப்பை ஓட்டினார் appeared first on Dinakaran.