ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை ஓய்ந்த நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவுடன் காணப்பட்டது. வழக்கமாக மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு காணப்படுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை மாதத்தில் பனிப்பொழிவு காணப்பட்டதால் உதகை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருப்பதை போல உணர்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரம்பாக்கம் பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி பயணம் செய்தனர். இதேபோல திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே காலை நேரத்தில் பனிமூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் இன்று வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு இருந்தது. திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகன ஓட்டிகள் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சாலைகள் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலப்பரப்புகளில் இந்த பனிமூட்டம் ஏற்பட்டு கடும் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. குமுளி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் முகப்பு விளக்குக்களை எரியவிட்டபடியே பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்பட்டன.
The post தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நிலவிய பனிப்பொழிவு: முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்ற வாகனங்கள் appeared first on Dinakaran.