* ரூ70 ஆயிரத்திற்கு சான்றிதழ் விற்ற கும்பல்
* 1630 பேர் பதிவு: 14 போலி மருத்துவர் கைது
சூரத்: குஜராத்தில் போலி நீதிமன்றம், போலி அரசு அலுவலகத்தை தொடர்ந்து தற்போது போலி மருத்துவ வாரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூரத் நகரில் ஒரு கும்பல் போலி மருத்துவ வாரியம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பான தகவல் அடிப்படையில் சூரத் நகரில் உள்ள மூன்று கிளினிக்களில் போலீசார் ரெய்டு நடத்தினர். இதில் மூன்று பேரும் பி.இ.எச்.எம். மருத்துவ படிப்புக்கான பட்டப்படிப்பு சான்றிதழை போலீஸாரிடம் காட்டினர். ஆனால் அது போன்ற ஒரு படிப்பு குஜராத்தில் கிடையாது. அந்த சான்றிதழ் போலி என்று தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் மருத்துவ படிப்புக்கான சான்றிதழை ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கியது தெரிய வந்தது. அவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான சான்றிதழை விற்ற டாக்டர் ராவத் மற்றும் ராஜேஷ் குஜராத்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ராவத் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டப்படிப்பும், ராஜேஷ் ஹோமியோபதியில் டிப்ளமோவும் படித்தவர்கள். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்த வித கட்டுப்பாடோ அல்லது விதிகளோ இல்லை என்பதால் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ராஜேஷ் குஜராத்தி அகமதாபாத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி போர்டு என்று ஒன்றை தனியாக தொடங்கி அதன் மூலம் போலி சான்றிதழ்களை ரூ.70 ஆயிரத்துக்கு வழங்கியுள்ளனர். சான்றிதழ்களை வாங்கியவர்கள் பதிவு செய்து கொள்ள சொந்தமாக ஒரு இணையதளமும் வைத்திருந்தனர். அதில் 1630 பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த போலி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் அடிப்படையில் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு வெறும் 15 நாளில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
The post போலி கோர்ட்டை தொடர்ந்து குஜராத்தில் போலி மருத்துவ வாரியம் appeared first on Dinakaran.