×

திடீர் அண்ணன்-தம்பி பாசம்; சீமான்-எஸ்.பி மோதலை பெரிதுபடுத்த வேண்டாம்: அண்ணாமலை வேண்டுகோள்


திருப்பூர்: சீமான் மீது அண்ணாமலைக்கு திடீர் பாசம் ஏற்பட்டு சீமான்-எஸ்.பி மோதலை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி உள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில் கடந்த 29ம் தேதி விவசாயி தேவசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டனர். நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, செந்தில்குமாரின் மனைவி கவிதாவுக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறையின் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். பாஜ சார்பில் அமித்ஷாவிற்கு கடிதம் எழுத உள்ளோம். அதில் இந்த வழக்கை காவல் துறையுடன் இணைந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தெரிவிக்கப்படும்.

கிராம பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 25 லட்சம் பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும். காவல் துறை எங்கே துப்பாக்கி எடுக்க வேண்டுமோ அங்கே எடுக்க வேண்டும். காவல் துறைக்கு அதிகாரம் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்காக நான் என்கவுன்டர் செய்ய ஆதரவு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் கூறியுள்ளார். அதற்கு வருண்குமாரை சீமான் ஒருமையில் பேசியுள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அண்ணாமலை, ‘‘ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் எனது பேட்ஜ் மேட். சீமான் தமிழ்நாட்டில் முக்கிய தலைவர். தமிழ்நாட்டிற்கு நாம் தமிழர் கட்சி தேவை. ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசியது வருண்குமாரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

அது அரசின் கருத்தோ அல்லது கட்சியின் கருத்தோ இல்லை. முதல்வரோ, காவல்துறையினரோ அவ்வாறு சொல்லவில்லை. இது வருண்குமாரின் தனிப்பட்ட கருத்தே ஆகும். மக்களுக்கு தெரியும் யார் பேசுவது சரி என்று. சீமான் எனக்கு அண்ணன் போன்றவர். அவர் இதனை பெரிதுப்படுத்த வேண்டாம். அரசியல் தலைவருக்கும், காவல்துறை அதிகாரிக்கும் சண்டை என கொள்ள வேண்டாம். அவரவர்கள் அவர்களது வேலையை பார்க்க வேண்டும்’’ என்று அண்ணாமலை கூறினார். ‘‘வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தபிறகு அண்ணாமலை மெச்சூர்டு ஆகிவிட்டார் என சீமான் கூறியிருக்கிறாரே?’’ என கேட்டபோது, ‘‘3 மாத காலம் வெளியில் இருந்து ஒரு கல்லூரியில் படித்தேன். நிறைய விஷயங்கள். நாம் செய்யும் தவறுகளை பார்க்கிறோம். நாம் செய்யும் நல்ல விசயங்களை பார்க்கிறோம். அவ்வப்போது நாம் கண்ணாடி பார்க்க வேண்டும்.

இந்த விசயத்தை இதைவிட பெட்டராக ஹேண்ட்ல் பண்ணலாமா? என பார்க்க வேண்டும். அவ்வப்போது நாமும் முதிர்ச்சியை காட்ட வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் 36 வயதில் சின்ன பையன் அரசியலுக்கு வந்துவிட்டான் என்று கூறுவதை விட, அரசியலுக்கு வந்தபிறகு அண்ணாமலை தன்னை இம்ப்ரூப் பண்ணி இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது குறைகளை நிவர்த்தி பண்ணுகிறார் என யாரும் கூறினால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அண்ணாமலை கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் பேட்டியளித்த சீமான், ‘லண்டன் சென்று வந்த பிறகு தம்பி அண்ணாமலையிடம் மாற்றம் தெரிகிறது. முதிர்ச்சி அடைந்து இருக்கிறார்’ என்றார். இந்நிலையில், நேற்று பேட்டியளித்த அண்ணாமலை, சீமானை அண்ணன் அண்ணன் என்று பாச மழை பொழிந்தார். அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன் எலியும், பூனையுமாக மோதி கொண்ட இருவரும் திடீர் அண்ணன், தம்பி பாச மழை பொழிந்து வருகின்றனர்.

‘நிறைய தவறு செய்துள்ளேன்’
அண்ணாமலை கூறுகையில், ‘நான் செய்கிற தவறுகளை நிறைய மீடியா நண்பர்கள் அவ்வப்போது சொல்வீங்க. இதற்கு ஏன் சண்டையிடுகிறீர்கள்? என வந்த புதிதில் மீடியா நண்பர்கள் கேட்டீர்கள். அந்த கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். முடிந்தவரை திருத்திக்கொள்ள பார்க்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மீடியா நண்பர்கள் என்னை திருத்துகிறீர்கள். இதனை ஏற்றுக்கொள்வது அரசியல்வாதியின் கடமை. நான் சொல்வது சரி என்று கூறக்கூடாது. நிறைய தவறுகள் செய்துள்ளேன். இதனை சுட்டிக்காட்டும்போது கண்ணாடியை பார்த்து திருத்திக்கொள்கிறேன். நல்ல விஷயம் செய்யும்போது பாராட்டுகிறீர்கள். இதனை வரவேற்கிறேன்’ என்றார்.

The post திடீர் அண்ணன்-தம்பி பாசம்; சீமான்-எஸ்.பி மோதலை பெரிதுபடுத்த வேண்டாம்: அண்ணாமலை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Seeman-S. B ,Annamalai ,Tiruppur ,Seeman-S ,Seaman ,Devasikamani ,Alamelu ,Sendilkumar ,Semalaikountampalayam ,Palladam, Tiruppur district ,Dinakaran ,
× RELATED பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார் அண்ணாமலை: திருமாவளவன் பேட்டி