திருவொற்றியூர்: கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை என்பதால் காசிமேட்டில் நேற்று மீன் விலை குறைந்தது. மேலும் மீன்பிரியர்கள் வரத்தும் மிகவும் குறைந்தது. வஞ்சிரம் ஒரு கிலோ 500க்கு விற்பனை செய்யப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புயல் மழைக்கு பின்பு ஏராளமான விசைப்படகுகளுடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள், நேற்று கரைக்கு திரும்பினர். பெரிய வகை மற்றும் சிறிய வகை இறால், மீன்கள் ஏராளமானவை மீனவர்களுக்கு கிடைத்தது. மீன் ஏலம் இடத்தில் வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் மிகக் குறைந்த அளவே வந்திருந்ததால் விசைப்படகு உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களிடம் இருந்த மீன்களில் ஒரு பகுதியை மட்டும் ஏலத்தில் விட்டு விட்டு மற்ற பகுதியை படகுகளிலிருந்து இறக்காமல் வைத்திருந்தனர்.
சில்லரை விலையிலும் மீன் விலை மிக குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. சிறிய வகை இறால் ரூ.60லிருந்து ரூ.150 வரை விற்கப்பட்டது. வஞ்சரம் ஒரு கிலோ ரூ.500க்கும், சிறிய ரக மீன்கள் மிகக் குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அங்கு வந்த மகிழ்ச்சியுடன் அதை வாங்கிச் சென்றனர். விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீன் விலை சரியாக கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். அப்போதுதான் விசைப்படகுகள் அதிகம் வரும். ஆனால் புயலுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் நேற்று வந்தது. ஆனாலும், விலை குறைவாக மீன்கள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
The post கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை மீன்கள் விலை குறைவு: வஞ்சிரம் கிலோ ரூ.500க்கு விற்பனை appeared first on Dinakaran.