சமுதாய முன்னேற்றம் அடைய பெண்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் கல்வியில் இடைநிற்றல் இருக்க கூடாது

* இளம் வயது திருமணம் கூடாது

* கரூர் கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் புத்தாக்க பயிற்சியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு முதல்வர், பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பம் முன்னேற்றம் அடைவதுடன், இந்த சமுதாயமே முன்னேற்றம் அடையும் என்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மதம் 1000ம் வழங்கப்படுகிறது. தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுககு மாதம் ரூ. 1000ம் வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகளை தொடர்ந்து, படிக்க வைக்க வேண்டும். இடைநின்றல் இருக்க கூடாது அவ்வாறு இடைநின்றல் நடைபெறும் போது, அவர்களுக்கு இள வயது திருமணம், குழந்தை தொழிலாளர் முறை போன்றவை நடைபெற வாய்ப்பு உள்ளது. இதை அங்கன்வாடி பணியாளர்கள் கண்காணித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் போன்றவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும். தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது புகார் அளித்து நடவடிக்கை மேற்கெர்ளள வேண்டும்.2022ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 918 பெண்களும், 2024 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1000ம் ஆண்களுக்கு 923 பெண்களும் என கணக்கிடப்பட்டுள்ளது.எனவே, பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பாக, சமுதாயத்திற்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விலங்குகள் கூட தனது குட்டிகளை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காது. ஆனால், மனிதன்தான் பெற்ற குழந்தைகளை வேண்டாம் என அரசிடமோ, வேறு ஏதாவது ஒரு வகையில் விட்டு விடுகிறான்.

இது வேதனை அளிக்க கூடிய விசயமாகும்.சமுதாயத்தில் தந்தை பெரியார் உள்ளிட்ட புரட்சியாளர்கள் தொடர்ந்து பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையிலேயே ஆட்சியாளர்கள் சமத்துவம் ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்யும் போது, அதன் தொடர்புடைய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் உள்ளது. தமிழ்நாடு அரசு இலவச கல்வி உபகரணங்கள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, காலை உணவு, தங்கும் விடுதிகள், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் என அனைத்துமே இலவசமாக வழங்கி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகள் உட்பட அனைவரையும் தொடர்ந்து படிக்க வைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக, சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்து மாதந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் டிசம்பர் மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து நடத்தும் விதமாக விழிப்புணர்வு ஊர்தியையும், உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடை பயணத்தையும் கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், மாவட்ட சமூக நலன் அலுவலர் சுவாதி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post சமுதாய முன்னேற்றம் அடைய பெண்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் கல்வியில் இடைநிற்றல் இருக்க கூடாது appeared first on Dinakaran.

Related Stories: