திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் வகையில் 36 ரோவர் கருவிகள் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் வகையில் 36 ரோவர் கருவிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இன்று நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை துரிதப்படுத்திடும் வகையில் ரூ.1.83 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 36 ரோவர் (DGPS – Rover) கருவிகளை உதவி ஆணையர்கள் மற்றும் உரிமம் பெற்ற நில அளவர்களிடம் வழங்கினார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
முதலமைச்சர் அவர்கள் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், இறையன்பர்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்தல், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திடும் வகையில் தங்க ரதம், வெள்ளிரதம் உருவாக்குதல், புதிய மரத்தேர், தேர் மராமத்து பணிகள் திருத்தேர்கொட்டகை அமைத்தல், பக்தர்கள் அதிகம் கூடும் திருக்கோயில்களில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்துதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், 13 முக்கிய திருவிழாக்களை சிறப்பான முறையில் நடத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்தல், கட்டணமில்லாமல் திருமணங்களை நடத்தி வைத்தல், 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 517 தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்தல், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

மேலும், தமிழ் கடவுளாம் முருக பெருமானுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பழனியில் நடத்தியது, திருக்கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் வகையில் பெருந்திட்ட வரைவின்கீழ் (Master Plan) பணிகளை மேற்கொள்ளுதல், மூத்தக் குடிமக்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணங்களை ஏற்பாடு செய்து நடத்துதல் என முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றபின் திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் மற்றும் திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள வருவாய் துறையின் மூலம் 38 தனி வட்டாட்சியர்கள், 172 உரிமம் பெற்ற நில அளவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்மூலம் ரூ.6,955 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலங்களை மீட்டு இருக்கின்றோம். திருக்கோயில் நிலங்களை நவீன ரோவர் கருவியின் மூலம் அளவீடு செய்யும் பணிகளை கடந்த 08.09.2021 அன்று மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வளாகத்தில் தொடங்கி வைத்தோம். இதுவரை 1,77,968 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், UDR தவறுகள் குறித்து மேல்முறையீடு செய்து 6,715 ஏக்கர் நிலங்களும், கணினி சிட்டாவில் தவறுகள் சரிசெய்யப்பட்டு 4,775 ஏக்கர் நிலங்களும் திருக்கோயில்கள் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கடந்த மாதத்தில் துணை முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் எனது தலைமையில் மூன்றுமுறை அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்று மாலையும் எனது தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்து இறையன்பர்கள் போற்றுகின்ற வகையில் இந்த அரசு செயலாற்றி வருகிறது. இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழாவை பக்தர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு வெகு சிறப்பாக நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்த நாள்முதல் எந்த ஆட்சியின் பார்வையும் திரும்பாத வடசென்னை பகுதியின் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்கள் வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி நேற்றைய முன்தினம் ரூ.1,383 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்கள் பேசும்போது, குறைகளை சொல்பவரிடம் நிறைகளை காணுகின்ற ஆட்சியாகவும், வாக்களித்தவருக்கும், வாக்களிக்காதவருக்கும் செயல்படுகின்ற ஆட்சியாகவும், எங்கள் மீது வசை பாடுபவர்களும் எங்களை வாழ்த்தும் வகையில் இந்த அரசு செயலாற்றும் என்று தெரிவித்தார். அதனை மெய்பிக்கும் வகையில் எங்களை தூற்றிக் கொண்டிருந்த மதுரை ஆதீனம் அவர்கள் இந்த துறையினுடைய செயல்பாடுகளையும், முதலமைச்சர் அவர்களின் ஆற்றலையும், துணை முதலமைச்சர் அவர்களின் வேகமான போர்க்கால நடவடிக்கைகளையும் மனம் திறந்து பாராட்டி இருக்கின்றார். உண்மையை பேசிய மதுரை ஆதீனத்திற்கு துறையின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பாக நடைபெறுகின்ற திருக்கோயில்கள், பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற திருக்கோயில்கள் போன்றவற்றை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்று எந்த காலத்திலும் எண்ணாது. அதைதான் முதலமைச்சர் அவர்களும் அறிவுறுத்தி இருக்கின்றார். சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் அனைத்தும் முறையாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது. தவறு எங்கு நேர்ந்தாலும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பென்றாலும் அதனை களைவதற்கும், சரி செய்வதற்கும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் தயங்காது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதிகப்படியாக இது குறித்து கருத்து கூற முடியாத நிலை உள்ளது. முடிவடையாத பல்வேறு பிரச்சனைகளுக்கு முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி காணும் முதல்வர் அவர்கள் இதற்கும் சட்ட போராட்டத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வருவார்.

முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் கருணையின் உறைவிடமாக மனிதநேயத்தின் மாண்பாளராக இருப்பவர்கள். ஆணவம் என்பது எங்களுக்கு எந்த காலத்திலும் வந்தது கிடையாது. திமுகவை பொறுத்த அளவில் இது வளர்ந்து வருகின்ற இயக்கமாகும். இயற்கை சீற்றங்களை பொறுத்தளவில் ஒரு சில நேரங்களில் அவை கணிக்க முடியாத அளவிற்கு உள்ளன. இருப்பினும் இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மக்களை காக்க இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா. சுகுமார், இ.ஆ.ப., ந. திருமகள், சி.ஹரிப்ரியா, தனி அலுவலர்கள் (ஆலய நிர்வாகம்) சு.ஜானகி, சுப்பையா, பி.பூங்கொடி, இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் வகையில் 36 ரோவர் கருவிகள் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Related Stories: