×

மதவெறி, சாதி வெறிகொண்டவர்களின் எண்ணம், இந்த ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவு நீரகற்று வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், “அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். அம்பேத்கரின் சிந்தனைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக எனது ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சியில்தான் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டது.

திருமாவளவன் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது . பட்டியலினத்தைச் சேர்ந்த 2136 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்காக தனியாக தொடங்கப்பட்ட திட்டம்தான் “அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்”. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். திமுக அரசு பழங்குடியினருக்காக காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அயோத்திதாசர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டியல், பழங்குடியின மக்களுக்காக திமுக அரசு செயல்படுத்தியதுபோன்ற திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும் செயல்படுத்தவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதில் திமுக அரசுக்கு வரும் நல்ல பெயருக்கு தூய்மை பணியாளர்கள் முக்கிய காரணம்.

மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்றுவதன் மூலமே மழை வெள்ளத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது. தூய்மை பணியாளர்கள் என்று சொல்வதைவிட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்று கூறலாம். மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே திமுக அரசின் இலக்கு. கழிவுநீர் அகற்றும் பணிகளை இயந்திரமாயமாக்கி உள்ளோம். எந்த மாநிலமும் நிறைவேற்றாத புதுமை திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. ஏதாவது ஒரு இடத்தில் பட்டியல் இனத்தவருக்கு நடந்த சம்பவத்தை மாநிலம் முழுவதும் நடப்பது போல் பெரிது படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் மதவெறியை பரப்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் எடுபடாது. மதவெறி, சாதி வெறி கொண்டவர்களின் எண்ணம், இந்த பெரியார், அம்பேத்கரின் மண்ணில் இந்த ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மதவெறி, சாதி வெறிகொண்டவர்களின் எண்ணம், இந்த ஸ்டாலின் இருக்கும் வரை ஒருபோதும் நிறைவேறாது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Stalin ,Chief Minister ,M.K.Stalin. ,CHENNAI ,Rajaratnam Stadium, Egmore, Chennai ,M. K. Stalin ,Annal Ambedkar ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...