திருப்பூர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

 

திருப்பூர், டிச.6: திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாய கூலித்தொழில் புரிந்து வரும் நபர்களுக்காக உழவர் பாதுகாப்பு திட்டம் 2011 செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 075 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2.50 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வைத்துள்ளவர்களும்,விவசாயம் சார்ந்த கூலித்தொழில் புரிந்து வருபவர்களும் இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேர தகுதி பெற்றவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் விபத்து மரண உதவித்தொகை ( சாலை விபத்து இதில் அடங்காது) ரூ.1 லட்சமும், இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்து 500 அவர்களின் சார்ந்தோருக்கு வழங்கப்படும். இது தவிர்த்து மகனின் திருமணத்திற்கு ரூ.8 ஆயிரம் மகளின் திருமணத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.மேலும் உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்லூரியில் பயின்று விடுதியில் தங்கி பயின்று வருபவர்களுக்கும் ஏற்கனவே படிப்பு உதவித்தொகை பெற்றிருந்தாலும் இந்த கல்வி உதவித்தொகையும் பெறலாம்.

இது தவிர்த்து 30க்கும் மேற்பட்ட நோய்களில் உறுப்பினர் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் நோய் தீர்க்கும் பொருட்டு தற்காலிக இயலாமை உதவித்தொகை மருத்துவரின் சான்றுப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகின்றது. எனவே மேற்காணும் தகுதிகளை பூர்த்தி செய்யும் உறுப்பினர்கள் அவர்களின் வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர்களையோ(அ) தனிவட்டாட்சியர் அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

The post திருப்பூர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: