சில நாட்களாக பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு; நீர்வளத்துறை தகவல்

திருவள்ளூர், டிச. 6: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் ஏரிகளில், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, நீர் இருப்பு அதிகரித்து இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை தொடங்கி தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வரத்து கால்வாய் மூலம் பெறப்படும் நீரால் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கூடி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 1,810 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4,360 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 27 கன அடியாகவும் உள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில், தற்போது தண்ணீர் இருப்பு 198 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 166 கன அடியாக உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது, தண்ணீர் இருப்பு 2,786 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 209 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 209 கன அடியாகவும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 325 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2,845 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 751 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 123 கன அடியாகவும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் மழை நீரால் நீர்த்தேக்கங்களில் இருப்பு கணிசமாக அதிகரித்து உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 9,747 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு அதிகரித்து இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நீர் இருப்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 3 ஆயிரம் மில்லியன் கனஅடி உயர்ந்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னைக்கு தண்ணீர் பஞ்சமே இருக்காது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சில நாட்களாக பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு; நீர்வளத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: