திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி வழியாக தமிழகத்திற்கு கடத்தப்படும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை தடுத்து நிறுத்தும் விதமாக, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்வேறு பேருந்துகளை நிறுத்தி பயணிகளிடம் போலீசார் சோதனை செய்தனர். இச்சோதனையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பாபு கான் (26), பீகாரைச் சேர்ந்த அப்தாப் (26), திருச்சியைச் சேர்ந்த தருண் (17), கர்நாடகாவைச் சேர்ந்த ரமேஷ் (40), காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தைச் சேர்ந்த ராஜா (28) ஆகிய 5 பேர் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 17 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் தங்கு தடையின்றி கிடைக்கும் போதைப்பொருட்களை கடத்தி தமிழகத்தில் விற்பனை செய்வது அதிகரித்துள்ள நிலையில், போலீசார் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
The post பொன்பாடி சோதனைச்சாவடியில் 17 கிலோ குட்கா பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.