×

ஜார்க்கண்டில் 11 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். கடந்த நவம்பர் 13ம் தேதி மற்றும் 20ம் தேதியில் ஜார்க்கண்ட் சட்டபேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 23ம் தேதி பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது.  இதில், ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி 56 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

81 உறுப்பினர்களை கொண்ட பேரவையில் ஜேஎம்எம் கட்சி 34 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 4 இடங்களையும் வென்றன. தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியை தக்க வைத்த ஹேமந்த் சோரன் கடந்த 28ம் தேதி முதல்வராக மீண்டும் பதவியேற்றார். இந்த நிலையில் மாநிலத்தில் 11 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் உள்ள அசோக் உத்யானில் பதவியேற்பு விழா நடந்தது.

இதில் ஆளுநர் சந்தோஷ்குமார் கங்க்வார் கலந்து கொண்டு புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த 6 பேரும், காங்கிரசை சேர்ந்த 4 பேரும் ஆர்ஜேடியை சேர்ந்த ஒருவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஜேஎம்எம் கட்சிக்கு முதல்வர் சோரன் உட்பட அமைச்சரவையில் 7 பேர் இடம் வகிக்கின்றனர்.காங்கிரசுக்கு 4 இடங்களும், ஆர்ஜேடிக்கு ஒரு இடமும் கிடைத்தது.

The post ஜார்க்கண்டில் 11 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Ranchi ,Jharkhand Assembly ,
× RELATED தேர்வாணைய தேர்வில் முறைகேடு...