×

விக்கிரவாண்டியில் நடந்த விஜய் மாநாட்டுக்கு சென்ற மகன் திரும்பவே இல்லை: ஐகோர்ட்டில் தந்தை ஆட்கொணர்வு மனு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடந்த விஜய் மாநாட்டுக்கு சென்ற வாலிபர் மாயமானதால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குன்னலூர் விளாங்காடு பகுதியைச் சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ‘நான் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வருகிறேன். இறால் பண்ணையில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு மேகநாதன் (33) என்ற மகனும், அனுஷ்யா என்ற மகளும் உள்ளனர். மகன் மேகநாதன் ஐடிஐ முடித்துவிட்டு டிவி மெக்கானிக் வேலை செய்து வந்தார், திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த 27-10-2024ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேகநாதன் சென்றார். அவருடன் 34 பேர் சென்றனர்.

மாநாடு முடிந்த பின்னர் என் மகனை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போன எனது மகனை கண்டுபிடித்து தருமாறு விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் என் மகனை கண்டுபிடிக்க சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் என் மகன் மேகநாதனை கண்டுபிடித்து தர உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து அந்த மனுவை உயர்நீதிமன்றம் விக்கிரவாண்டி காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்பேரில் விக்கிரவாண்டி போலீசார் காணாமல் போன மேகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post விக்கிரவாண்டியில் நடந்த விஜய் மாநாட்டுக்கு சென்ற மகன் திரும்பவே இல்லை: ஐகோர்ட்டில் தந்தை ஆட்கொணர்வு மனு appeared first on Dinakaran.

Tags : Vijay conference ,Vikravandi ,Vijay convention ,Madras High Court ,Tiruvarur district ,Tiruthurapoondi taluka Kunnalur Vilangadu ,ICourt ,Dinakaran ,
× RELATED விழுப்புரத்தில் மிதமான மழை..!!