செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ளது சீக்கனாங்குப்பம் ஊராட்சி. இங்கு 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு சாலையோரங்களில், ஒவ்வொரு குடியிருப்பு பகுதி அருகே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால், இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரங்களில் ஆங்காங்கே தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. மேலும், தேங்கியுள்ள இந்த கழிவுநீர் சாலையோரம் குழாய்களில் செல்லும் குடிநீரில் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் ஏற்படுத்தி, குடிநீர் குழாய்களை உயர்த்தி அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பெரும் நோய்கள் பரவுவதற்கு முன் இப்பகுதி மக்கள் நலன் கருதி இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் ஏற்படுத்தி குடிநீர் குழாய்களின் உயரத்தை உயர்த்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post சீக்கனாங்குப்பம் ஊராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.