பெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நிவாரணப்பணி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகவல்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: பெஞ்சல் புயல் மற்றும் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் கரையோரம் வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாலங்களும் சாலைகளும் பழுதடைந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடந்த பல பேரிடர்களின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது போலவே இந்த பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்க தன்னுடைய தொண்டர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களமிறக்கியுள்ளது. ஜமாத்தின் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநில செயலாளர்கள் கே.சித்திக் ,கடலூர் சேட் முஹம்மது , ஃபெரோஸ் கான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், கடலூர் வடக்கு, தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட, கிளை நிர்வாகிகளும் தொண்டர்களோடு இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை இரண்டாம் நாளாக செய்தனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதுல் கூறி, அவர்களுக்கு உணவளிப்பது நிவாரணப் பொருட்களை வழங்குவது போன்ற பணிகளை டி.என்.டி.ஜே தொண்டர்கள் செய்து வருகின்றனர். தண்ணீர் முற்றிலும் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லுதல், தெருக்கள், சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுதல், உடைந்துள்ள கால்வாய்களின் அடைப்புகளை சரி செய்தல், பிரட், பால், கொசுவர்த்தி சுருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம், கடலூர்,பாண்டிச்சேரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர்.

The post பெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நிவாரணப்பணி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: