லாஸ்ஏஞ்சல்ஸ்: ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மீண்டும் ஆஸ்கர் போட்டி பட்டியலில் இணைந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 3வது ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தாண்டு வெளியான ‘ஆடுஜீவிதம்’ மலையாள படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார். ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனதுர் பிளஸி இயக்கத்தில் வெளியான படம் இது. பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், வெளிநாட்டு வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்ட ஒருவரின் உண்மையான வாழ்க்கையை மையப்படுத்தி கதை அமைந்துள்ளது.
இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஆடுஜீவிதம்’ படம் இடம் பெற்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ‘ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து, ‘இன்டிக்பேர்’, ‘புதுமழ’ ஆகிய இரு பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பின்னணி இசைக்கு 146 படங்கள் தேர்வாகியுள்ளது. இதில் வாக்கெடுப்பு நடத்தி 15 பாடல்கள் மற்றும் 20 பின்னணி இசை தேர்வு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பட்டியலுக்கு செல்லும். இதன் மூலம் 3வது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பலரும் அவர் விருது பெற வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.
The post ‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக மீண்டும் ஆஸ்கர் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் appeared first on Dinakaran.