×

அடிலெய்டில் அடிபணிய போவது யார்? இந்தியா-ஆஸி. மோதும் 2வது டெஸ்ட் நாளை துவக்கம்: பிங்க் பந்தில் பகலிரவாக நடக்கிறது


அடிலெய்ட்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நாளை துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையே 2வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, ஹர்ஷித் ரானா, சிராஜ் வேகத்தில் மிரட்டி வருகின்றனர். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி பேட்டிங்குடன் பவுலிங்கிலும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

அடுத்ததாக பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்டின் சரவெடி ஆட்டம், கடந்த போட்டியில் சதம், அரை சதமடித்து பார்முக்கு திரும்பிய கோஹ்லி, ராகுலின் அனுபவ ஆட்டம் மற்றும் ரோகித் மீண்டும் அணிக்கு திரும்பியது இந்திய அணிக்கு மேலும் வலுவை கொடுக்கும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவும் முதல் டெஸ்ட் தோல்விக்கு பழிதீர்க்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக பகலிரவு ஆட்டத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகும் என்பதால் அணிக்குள் புதுவரவாக கடந்த உள்நாட்டு போட்டிகளில் கலக்கிய 30 வயதாகும் பியூ வெப்ஸ்டரை தனது ஸ்குவாடில் சேர்த்துள்ளது. இவர் உள்நாட்டில் நடந்த கடந்த 2 சீசன்களில் மட்டும் 1,788 ரன்கள் (சராசரி 51.08), 30 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இவர் பிளேயிங் லெவனில் சேரும்பட்சத்தில் லபுசேனுக்கு கல்தா கொடுக்கலாம் என கூறப்படுகிறது. ஹேசல்வுட் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக போலன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், போலன்ட் உடன் வெப்ஸ்டரும் இணைந்தால் ஆஸ்திரேலியாவுக்கு 5 வேகங்கள் கிடைப்பர்.

பேட்டிங்கில் கடந்த போட்டியில் கலக்கிய டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித், கவாஜா, அலெக்ஸ் கேரி என அந்த அணி வலுவான நிலையிலே உள்ளது. இந்த 2வது டெஸ்டில் இந்தியா ஜெயிக்கும்பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தலாம். அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்க் பட்டியலில் சத்தமே இல்லாமல் 2வது இடத்திற்கு வந்த தென் ஆப்ரிக்கா அணியால் 3வது இடத்திற்கு சறுக்கிய ஆஸ்திரேலியாவும் தனது பைனல் வாய்ப்பை அதிகப்படுத்திட முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த பகலிரவு டெஸ்ட் இந்திய நேரப்படி காலையில் 9.30 மணிக்கு துவங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பை காணலாம்.

பழிதீர்க்குமா இந்தியா?
கடந்த 2020 டிசம்பரில் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை 36 ரன்களில் சுருட்டியது. இதுவே இந்தியாவின் ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ரன்கள் ஆகும். இந்த முறை இந்தியா அதற்கு பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெற்றி வாய்ப்பு
அடிலெய்ட் பிட்சை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த அணிகள் 41 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 21 முறையும் வெற்றி கண்டுள்ளன. 20 ேபாட்டிகள் டிரா மற்றும் முடிவு இல்லை.

அதிகபட்சம் குறைந்தபட்சம்
அடிலெய்ட் பிட்சில் 1948ல் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்சில் இந்தியாவுக்கு எதிராக 674 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும். 2020ல் இந்தியா ஒரு இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்சமாகும்.

இந்திய அணியில் இரு மாற்றம்
ரோகித் சர்மா அணிக்கு திரும்புவதுடன் சுப்மன் கில்லும் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் படிக்கல், ஜூரல் ஆகியோர் பெஞ்சில் உட்கார வைக்கப்படலாம்.

முதல் நாள் ஆட்டம் மழையால் தடையாகுமா?
பிட்ச் பராமரிப்பாளர் டேமியன் ஹக் கூறுகையில், ‘‘முதல் நாளில் 88 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆட்டம் தடைபடலாம். அதேநேரம் இரண்டாவது நாள் ஆட்டம் வானிலை தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கும் பொதுவான பிட்ச் ஆக தான் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் முன்னேற்றம், சில திருப்பங்களை பொறுத்து பவுன்ஸ் செய்தால் நன்றாக இருக்கும். இது ஒரு சமநிலையான போட்டி. நிச்சயம் பொழுது ேபாக்கிற்கு உறுதியளிக்கிறோம்’’ என்றார்.

பகலிரவு ஆட்டம் இதுவரை…
ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 12ல் விளையாடி ஒன்றில் மட்டுமே (வெஸ்ட் இண்டிஸ் அணியுடன்) தோல்வியடைந்துள்ளது. இந்தியா இதுவரை 4ல் விளையாடி ஒன்றில் மட்டுமே (ஆஸ்திரேலியாவுடன்) தோல்வியடைந்துள்ளது.

The post அடிலெய்டில் அடிபணிய போவது யார்? இந்தியா-ஆஸி. மோதும் 2வது டெஸ்ட் நாளை துவக்கம்: பிங்க் பந்தில் பகலிரவாக நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Adelaide ,India ,Aussie ,Australia ,-Gavaskar ,Perth… ,Test ,Dinakaran ,
× RELATED சச்சின் சாதனையை தகர்க்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு