மீனம்பாக்கம்: லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் லண்டனுக்கே திரும்பியது. இதனால் சென்னை விமான நிலையத்தில் 8 மணி நேர தாமதத்தால் இன்று அதிகாலை அந்த விமானத்தில் லண்டனுக்கு செல்ல வேண்டிய 320 பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 328 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.
அதே நிலையில் விமானத்தை தொடர்ந்து இயக்கினால் பெரும் விபத்து நிகழும் என்பதை விமானி உணர்ந்தார். இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்துள்ளார். அப்போது லண்டன் விமானநிலையம்தான் அருகில் உள்ளது என்பதை உணர்ந்த விமானி, லண்டன் விமானநிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், லண்டனில் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் லண்டன் விமான நிலையத்துக்கே திரும்பி சென்று தரையிறங்கியது.
இதையடுத்து பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 8 மணி நேரத்துக்கு பின்னர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னைக்கு 328 பயணிகளுடன் மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் வழக்கமாக அதிகாலை 5.35 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும். எனினும், இன்று சுமார் 8 மணி நேரம் தாமதமாக மதியம் ஒரு மணியளவில் சென்னைக்கு வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, சென்னையில் இருந்து வழக்கம் போல் காலை 7.35 மணியளவில் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு செல்லும். இதனால், அந்த விமானம் இன்று காலை தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த விமானம் சுமார் 8 மணி நேரம் தாமதமாக, இன்று மாலை 3.10 மணியளவில் லண்டனுக்குப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து இன்று காலை லண்டனுக்கு புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல வேண்டிய 320 பயணிகள் உள்ளனர். அவர்களுக்கு விமான தாமதம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
எனினும், அந்த விமானத்தில் செல்ல வேண்டிய வெளியூர் பயணிகளில் பலர், ஏற்கெனவே சென்னை விமானநிலையத்துக்கு வந்துவிட்டனர். இதேபோல் லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8 மணி நேரம் தாமதமாகி உள்ளதால், இன்று சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட வேண்டிய 320 பயணிகளும், லண்டனில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 328 பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நடுவானில் தொழில்நுட்ப கோளாறு சென்னை விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பியது: 8 மணி நேர தாமதத்தால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.