புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26,273 மதிப்பிலான மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்

புதுக்கோட்டை, டிச. 3: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26,273 மதிப்பிலான மானிய விலையில் வேளாண் இடுபொருட்களை கலெக்டர் அருணா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்களை, மாவட்ட கலெக்டர் அருணா, நேற்று வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து வளமும், நலமும் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்கிடும் உன்னதமான எண்ணங்களுடன் தன்னிலமற்ற பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒவ்வொரு அரசு துறைகளிலும் உருவாக்கி, தமிழ்நாடு இந்தியாவில் முன்னிலை மாநிலம் என போற்றப்படும் வகையில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில், வேளாண் உற்பத்தியை மேம்படுத்திடவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடவும், தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வணிக ரீதியாகவும், புதிய விவசாய முறைகளையும், விவசாய உட்கட்டமைப்பையும் உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஆழ்துளைக்கிணறு அமைத்தல், மின் இணைப்பு, சூரியசக்தி பம்பு செட்டுகள், பண்ணைக்குட்டைகள், தரிசு நிலத்தொகுப்புகளில் நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பயறு விதைகள், விசைத் தெளிப்பான்கள், தார்ப்பாய்கள், பல மரக்கன்றுகள், தோட்டத்தலைகள் உள்ளிட்ட பல்வேறு விவசாய இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்றையதினம், கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.4,150 மதிப்பிலான பேட்டரி தெளிப்பான், ரூ.2,075 மானிய விலையில் 3 பயனாளிகளுக்கும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ.512 மதிப்பிலான 4 கிலோ உளுந்து சிறுதளை மானிய விலையில் 4 பயனாளிகளுக்கும், ஒருங்கிணைந்த பண்ணையம் 2024-2025ன் கீழ் ரூ.12,300 மதிப்பிலான மண்புழு உரப்படுக்கை ரூ.6,000 மானிய விலையில் 3 பயனாளிகளுக்கும் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.26,273 மதிப்பிலான மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித்திட்டத்தின்கீழ் மானிய விலையில் பேட்டரி தெளிப்பான் பெற்றுக்கொண்ட புத்தாம்பூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்ற பயனாளி இதுபோன்ற வேளாண் இடுபொருட்களை வழங்கி விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமாக விளங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை விவசாயிகளின் சார்பில் தெரிவித்துள்ளார். எனவே இதுபோன்ற அரசின் நலத் திட்டங்களை விவசாயிகள் அனைவரும் உரிய முறையில் பெற்றுகொண்டு, தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், இணை இயக்குநர் (வேளாண்மை) சங்கரலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26,273 மதிப்பிலான மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் appeared first on Dinakaran.

Related Stories: