×

பிளஸ் 1 மாணவியை கடத்திய திருவாரூர் வாலிபர் அதிரடி கைது ‘செல்போனில் ராங் கால்’ மூலம் பழக்கம்

கண்ணமங்கலம், டிச.4: கண்ணமங்கலம் அருகே பிளஸ் 1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவி. இவர் கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம், உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாணவியின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், மாணவி வேலூரில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் வேலூர் சென்று அங்கிருந்த மாணவியையும், அவருடன் இருந்த ஒரு வாலிபரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் மாணவிக்கு வந்த ‘ராங் கால்’ மூலமாக திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, கொல்மாங்குடி, அகரம்ரோடு பகுதியை சேர்ந்த முருகவேல்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய மாணவி, முருகவேலுடன் வேலூர் லாட்ஜில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகவேலை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாணவியை, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைதான முருகவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post பிளஸ் 1 மாணவியை கடத்திய திருவாரூர் வாலிபர் அதிரடி கைது ‘செல்போனில் ராங் கால்’ மூலம் பழக்கம் appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Tiruvannamalai district ,
× RELATED கண்ணமங்கலத்தில் ஏரிக்கால்வாய் அடைப்புகள் ஜேசிபி மூலம் சீரமைப்பு