அடிலெய்ட்: ஒரு நாட்டுக்கு எதிராக அந்த நாட்டில் நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக 11 சதங்கள் விளாசிய சாதனைக்கு சொந்தக்காரராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் திகழ்கிறார். 76 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இந்த சாதனையை, ஆஸியுடனான தொடரில் மீதமுள்ள 4 டெஸ்ட்களில் ஒன்றில் சதமடித்து, விராட் கோஹ்லி சமன் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆஸி கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஒரு நாட்டுக்கு எதிராக அதிகபட்சம் 11 சதங்கள் விளாசிய பிராட்மேனின் சாதனை கடந்த 76 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது.
கடந்த 1930 – 1948க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கெதிராக அந்த நாட்டில் நடந்த போட்டிகளில் டான் பிராட்மேன் 11 முறை சதங்களை விளாசியுள்ளார். 19 போட்டிகளில் 30 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்த பிராட்மேனின் சராசரி ரன் குவிப்பு 102.84. இதில் அதிகபட்ச ஸ்கோர், 384. தவிர, இங்கிலாந்தில் அந்நாட்டுக்கு எதிராக 3 அரை சதங்களையும் அவர் எடுத்துள்ளார். பிராட்மேனின் இந்த சாதனையை சமன் செய்யவும், முறியடிக்கவும், ஆஸியில் தற்போது நடந்து வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் தொடரில், இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் கோஹ்லிக்கு, அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் கோஹ்லி அவுட்டாகாமல் 100 ரன் எடுத்துள்ளார். அந்த சதத்தை சேர்த்து, ஆஸியில், அந்த நாட்டு அணிக்கெதிராக 14 டெஸ்ட் போட்டிகளில், 27 இன்னிங்ஸ்களில் ஆடி 7 சதங்களை கோஹ்லி எடுத்துள்ளார். தவிர, 18 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 3 சதங்களையும் விளாசி உள்ளார். இரண்டிலும் சேர்த்து கோஹ்லி அடித்த சதங்கள் 10. இன்னும் ஒரு சதத்தை தற்போதைய தொடரில் அடித்தால், பிராட்மேனின் 76 ஆண்டாக முறியடிக்கப்படாத சாதனையை கோஹ்லி சமன் செய்வார். 2 சதங்கள் விளாசினால், அந்த சாதனையை முறியடிக்கும் மகத்தான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும்.
The post ஆஸி ஜாம்பவான் டான் பிராட்மேனின் 76 ஆண்டு சாதனையை சதம் அடித்து விராட் கோஹ்லி பதம் பார்ப்பாரா? appeared first on Dinakaran.