தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: 4 பேரிடம் விசாரணை

புழல்: தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மொண்டியம்மன் நகர் சுப்பிரமணி பாரதி தெருவைச் சேர்ந்தவர் குமார் (50) இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாரதி (38) அப்பகுதியில் உள்ளவர்களிடம் மாத ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி நகை பண்டு நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆயிஷா (40) என்பவர் பாரதி மூலம் அறிமுகமாகி சுமார் 150க்கும் மேற்பட்ட நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாதச் சீட்டு கட்டியவர்களுக்கும் தீபாவளிச் சீட்டு கட்டியவர்களுக்கும் பணம் மற்றும் நகைகள், இனிப்புகள் வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பாரதி வீட்டுக்குச் சென்று கேட்டபோது அங்கிருந்து பாரதி மற்றும் அவரது மகன்கள் குகன் (22), பாரத் (19) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் குமார், அவரது மனைவி பாரதி, மகன்கள் குகன், பரத் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

The post தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: