சென்னை: உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்ததால், தனது அண்ணன் பெயரை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவி மற்றும் நீதிமன்றம், போலீசாரை ஏமற்றி வந்த மோசடி நபரை போலீசார் பொறிவைத்து கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தனது அண்ணன் பன்னீர்செல்வம் போன்று அச்சு அசல் ஒரேமாதியாக இருப்பார். ஊதாரியாக சுற்றி வந்த பழனி தனது சகோதரன் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி வேலை செய்து வந்தார். பின்னர் கடந்த 2002ம் ஆண்டு லூர்து மேரி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். லூர்து மேரியிடம் தான் பன்னீர்செல்வம் என்றும் தன்னை செல்லமாக பழனி என்று எங்கள் குடும்பத்தினர் அழைத்து வருவதாக கூறி வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
இதற்கிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், தனது கணவன் பன்னீர்செல்வத்தின் மீது அவரது மனைவி லூர்து மேரி கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பன்னீர்செல்வம் என்ற பெயரில் வாழ்ந்து வந்த பழனி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை என்றாலும், வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பழனிக்கு பதில் அவரது சகோதரன் பன்னீர்செல்வத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் பன்னீர்செல்வத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தார். அதிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்ததை கண்டு பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுற்றி வந்த பழனி தலைமறைவாகி விட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பழனி தான் உண்மையான குற்றவாளி என்றும், அவரது சகோதரர் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பழனி தனது மனைவி மற்றும் நீதிமன்றம், போலீசாரை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து கோடம்பாக்கம் போலீசார் பல மாதங்களாக பல்வேறு வேடங்களில் தலைமறைவாக இருந்த வந்த பழனியை மடிப்பாக்கத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். சென்னையில் காதல் மனைவி மற்றும் பொதுமக்களிடம் தனது சகோதரன் பன்னீர்செல்வத்தின் பெயரை பயன்படுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்ததால் அண்ணன் பெயரை பயன்படுத்தி மனைவி, நீதிமன்றம் போலீசாரை ஏமாற்றிய மோசடி தம்பி கைது: 20 ஆண்டுகளாக சகோதரனாக சுற்றியதும் விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.