ஃபெஞ்சல் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

டெல்லி: ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் பெய்த அதி கனமழையின் காரணமாக தீபமலையில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு நிலச்சரிவில் ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 2 குழந்தைகள் உடல்கள் மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது; “தமிழகத்தில் ஃபெஞ்சல் சூறாவளியின் பேரழிவு செய்தி. இந்த சோகத்தின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீடுகள், உடைமைகளை மக்கள் இழந்தது கவலையளிக்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post ஃபெஞ்சல் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: