×

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5.30 லட்சம் பேருக்கு உணவு மழைநீரை அகற்றி சுத்தப்படுத்த 22 ஆயிரம் களப்பணியாளர்கள்: மாநகராட்சி தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சென்னை முழுவதும் மழைநீரை அகற்றுவது, சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணியில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 798.95 மி.மீ. அளவு மழை பதிவானது. அதேபோன்று, நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை சராசரியாக 10.85 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அயப்பாக்கத்தில் 26.70 மி.மீ. மழை அளவும், குறைந்த பட்சமாக உத்தண்டியில் 0.30 மி.மீ. மழை அளவும் பதிவாகியுள்ளது.

கடந்த 30ம் தேதி காலை, மதியம், இரவு என மொத்தம் 6,35,300 பேருக்கும், நேற்று முன்தினம் காலை, மதியம், இரவு என மொத்தம் 5,30,150 பேருக்கும், நேற்று காலை 24,000 பேருக்கும் உணவு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களிலும் கடந்த 30ம் தேதி இலவசமாக 1,07,047 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. மழைக்காலத்தை முன்னிட்டு, அக்டோபர் 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் மட்டும் இதுவரை 2,839 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 1,53,120 நபர்கள் பயனடைந்துள்ளனர். நேற்று 192 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

தற்போது பெய்த மழையின் காரணமாக 13 இடங்களில் மழைநீர் தேங்கியது. இதில், 6 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 இடங்களில் துரிதமாக மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 361 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நிவாரண மையங்களில் தற்போது எவரும் இல்லை. இந்த நிவாரண மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 101 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 100 ஹெச்பி மோட்டார் பம்புகள் 137 எண்ணிக்கையில் தயார் நிலையில் உள்ளன.

மேலும் டிராக்டர் மேல் 484 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், 2 ஹைட்ராலிக் ஏணி, 262 மர அறுவை இயந்திரங்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என மொத்தம் 489 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 299 தூர்வாரும் இயந்திரங்களும், 73 அதிவேக கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்களும், 225 ஜெட்ராடிங் வாகனங்களும், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 45 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 642 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* 40,043 புகார்களுக்கு தீர்வு
அக்டோரபர் 15ம் தேதி முதல் நேற்று வரை பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணிற்கு 52,333 புகார்கள் பெறப்பட்டு, 40,043 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12,290 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* 18,500 தன்னார்வலர்கள்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட இதுவரை 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

The post பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5.30 லட்சம் பேருக்கு உணவு மழைநீரை அகற்றி சுத்தப்படுத்த 22 ஆயிரம் களப்பணியாளர்கள்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Corporation ,Chennai ,Chennai Corporation ,Northeast Monsoon ,Corporation Information ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் வருவாயை பெருக்கும்...