திருவள்ளூர்: பெஞ்சல் புயல் மழையால் மாநில நெடுஞ்சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பெஞ்சல் புயல் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இதேபோல், திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் உட்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவின் பேரில் திருவள்ளூர் கோட்ட பொறியாளர் டி.சிற்றரசு மேற்பார்வையில், அம்பத்தூர் உட்கோட்ட பொறியாளர் ஜி.மகேஸ்வரன் தலைமையில் உதவி பொறியாளர் எஸ்.கார்த்தி மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பட்டாபிராம், இந்து நகரில் தேங்கி நின்ற மழை நீரை நேற்றுமுன்தினம் உடனடியாக அகற்றி சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டனர்.
அதேபோல், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திருமுல்லைவாயல் மணிகண்டபுரம், அனுமன் நகர் மற்றும் பாலாஜி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் பெஞ்சல் புயலால் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் இருந்து ரயில்வே மேம்பாலம் வழியாக நந்தியம்பாக்கம் ஊராட்சி கொங்கி அம்மன் நகர், நேதாஜி நகர், ஆதிலட்சுமி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி மற்றும் வார்டு உறுப்பினர் வள்ளி வில்வநாதன் ஆகியோர் பொக்லைன் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் எங்கெங்கு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதோ அங்கு சென்று ஊராட்சி தலைவருடன் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
The post பெஞ்சல் புயல் மழையால் மாநில நெடுஞ்சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் உடனடி அகற்றம்: சீரமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.