ஊத்துக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் உயிரிழப்பு

 

ஊத்துக்கோட்டை, டிச.2: ஊத்துக்கோட்டை அருகே, புயல் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, மெய்யூர் கிராமத்தில் பண்டார தெருவில் வசித்து வருபவர் செல்வம் (45), விவசாயி. இவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் அவருக்குச் சொந்தமான 9 பசு மாடுகள் மற்றும் ஒரு காளை மாடு என மொத்தம் 10 மாடுகளை பராமரித்து வந்தார்.

நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருவதால் மாடுகளை மேய்க்க வெளியில் செல்ல முடியாததால் கொட்டகையிலேயே கட்டிப்போட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெஞ்சல் புயல் காரணமாக புயல் காற்று வீசியதால் கொட்டகை அருகே இருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதில், 2 பசு மாடுகள், ஒரு காளை மாடு என 3 மாடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து, பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ஊத்துக்கோட்டை அருகே, செஞ்சியகரம் கிராம வயல் வெளியில் குணசேகரன் என்பவரின் மனைவி மஞ்சுளா (55) என்பவருக்குச் சொந்தமான 2 எருமை மாடுகள் வயல்வெளியில் மேய்ந்தபோது 2 மாடுகளும், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணி (63) என்பவரின் ஒரு எருமை மாடும் மின் கம்பி அறுந்து விழுந்து இறந்தன. இதுகுறித்து, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் மஞ்சுளா மற்றும் மணி ஆகியோர் புகார் அளித்தனர். அதன்பேரில், எஸ்ஐ பிரசன்ன வரதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஊத்துக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: