திருத்தணி, டிச. 2: திருவாலங்காடு பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் கன மழை காரணமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் விவசாயிகளின் நீராதாரமாக விளங்கும் கொசஸ்தலை, நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடங்கியுள்ளது. ஓரிரு நாட்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கனமழைக்கு விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த நிலக்கடலை, பச்சை பயறு, உளுந்து பயிர்கள் நாசமடைந்துள்ளது. குறிப்பாக திருவாலங்காடு ஒன்றியத்தில் மணவூர், ராஜபத்மாபுரம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 200 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தபோது மழைநீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post திருவாலங்காடு ஒன்றியத்தில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர் appeared first on Dinakaran.