×
Saravana Stores

நாகூர் தர்கா கந்தூரி விழா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றம்: 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாகப்பட்டினம்: புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 5 மினராக்களில் நேற்று பாய்மரம் ஏற்றப்பட்டது. புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா தமிழகத்தில் மிகப்பெரிய தர்கா ஆகும். இந்த தர்காவிற்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழும் நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் பெரிய ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு 468வது கந்தூரி விழா நாளை (2ம் தேதி) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

வரும் 11ம் தேதி சந்தனகூடு ஊர்வலம், 12ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள 5 மினராக்கள் நேற்று பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் சாஹிப் மினராவில் பழக்க வழக்கப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது. பின்னர் தஞ்சாவூர் மகராஜா கட்டி கொடுத்த பெரிய மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து தலைமாட்டு மினரா, ஓட்டுமினரா, முதுபக்மினரா ஆகிய மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது.

கந்தூரி விழா ஏற்பாடுகளை நாகூர் ஆண்டவர் தர்கா மானேஜிங் டிரஸ்டி செய்யது முஹம்மத் காஜி ஹுசைன் சாஹிப் மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். நாகூர் தர்கா பிரசிடெண்ட் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஏராளனமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர். நாகூர் தர்கா பிரசிடெண்ட் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டு நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவிற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் உத்தரவின் பேரில் முதல் முறையாக 100 சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது. அதே போல் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் தினந்தோறும் அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு கந்தூரி விழா ஏற்பாடுகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்கி சிறந்த முறையில் பணிபுரிந்து வருகிறார். நாகப்பட்டினம் நகராட்சி அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது. இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

The post நாகூர் தர்கா கந்தூரி விழா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றம்: 100 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagore Dargah Ganduri Festival ,Nagapattinam ,Dargah Ganduri festival ,Lord of ,Nagor ,Nagore Andavar Dargah ,Tamil Nadu ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையால்...