கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஒளி-ஒலி காட்சிக்கூடம் அமைக்கும் திட்டப்பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் தினமும் 40 நிமிடங்கள் திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒளி கண்காட்சி நடைபெற உள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்பகுதியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுற்றுலாத்துறை சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் திருவள்ளுவர் சிலையில் ஒளி-ஒலி காட்சி கூடம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி திருவள்ளுவர் சிலையில் விளக்குகள் பொருத்தப்பட்டு அவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் திரையில் காணும்படி அமைக்கப்பட இருந்தது. மேலும் திருக்குறள் அடங்கிய வாசகங்களும் திரையில் வருவது போல் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் ஒளி-ஒலி காட்சிக்கூட திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 1ம் தேதி திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளிவிழா காண உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி நகரை அழகுபடுத்த மாவட்ட கலெக்டர் அழகுமீனா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். நகர் முழுவதும் ரூ.10 கோடியில் பல்வேறு பணிகள் கலெக்டரின் மேற்பார்வையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த 2011ம் ஆண்டு கைவிடப்பட்ட ஒளி-ஒலி காட்சிக்கூட திட்டம் குறித்து அறிந்த கலெக்டர் அழகுமீனா திட்டத்துக்கு புத்துயிர் அளித்து அதனை மீண்டும் செயல்படுத்த நினைத்தார். இதனை தொடர்ந்து அவர் திட்டத்தை சுற்றுலாத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் கோரிக்கை ஏற்கப்பட்டு சுமார் ரூ.11 கோடி மதிப்பில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் திருவள்ளுவர் சிலையில் ஒளி-ஒலி காட்சிக்கூடம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக திருவள்ளுவர் சிலையின் உச்சியில் இருந்து பாதம் வரை பல்வேறு வண்ண லேசர் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளது. பூம்புகார் போக்குவரத்து கழக வளாகத்தில் சுமார் 100 சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட உள்ளது. தினமும் மாலை 6 மணிக்கு காட்சி தொடங்கி சுமார் 40 நிமிடங்கள் ஒளி-ஒலி கண்காட்சி நடைபெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதன்படி சுற்றுலா பயணிகள் லேசர் விளக்குகளில் திருவள்ளுவர் சிலையின் உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நிறங்களில் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கலெக்டர் அழகுமீனா கன்னியாகுமரியில் ஒளி-ஒலி காட்சிக்கூடம் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பணிகளின் விவரத்தை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post கன்னியாகுமரியில் புத்துயிர் பெறும் ஒளி-ஒலி காட்சிக்கூடம்; திருவள்ளுவர் சிலையில் தினமும் 40 நிமிடம் லேசர் ஒளி கண்காட்சி: 50 சதவீத பணிகள் நிறைவு appeared first on Dinakaran.