குன்னூர்: ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பயிற்சி பெறுவது மிகவும் மகிழ்ச்சி. வரும் காலங்களில் முப்படைகளிலும் பெண்கள் அதிகம் இணைவார்கள் என்று குன்னூரில் நடந்த விழாவில் ஜனாதிபதி பேசி உள்ளார். தமிழ்நாட்டில் 4 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்து தங்கினார். அங்கிருந்து நேற்று குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
அப்போது பயிற்சி பெற்று வரும் இந்திய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது: ராணுவ பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இனி வரும் காலங்களில் அதிகளவில் பெண்கள் பயிற்சியில் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறேன். பல பெண்கள் முப்படைகளும் இணைவார்கள் என நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரித்து வருகிறது.
இந்தியா, எதிர்கால சாவல்களை எதிர்கொள்ளும் வகையில் தனித்துவத்துடன், சுய சார்புடன் முன்னேறி வருகிறது. தற்போது இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை விட 30 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதற்கு, ‘மேக் இன் இந்தியா’ திட்டமே காரணம். உலக அளவில் தற்போது மாறி வரும் புவி அரசியல் அமைப்பு மாற்றத்தால் நாம் புதிய சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றுமின்றி, சைபர் குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்தை சமாளிக்க வேண்டி நிலையும் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் என்பது பெரிய சவாலாக உருவாகியுள்ள நிலையில் அதற்கான ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் நவீன தொழில்நுட்பகளை உருவாக்க வேண்டும். நமது முப்படைகள் அவற்றை சமாளிக்கும் வல்லமை படைத்தவையாக விளங்குகிறது. ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் வெளிநாட்டு அதிகாரிகளிடம் இந்தியா உலகத்தை ஒரு குடும்பமாக பாவித்து வருகிறது. சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் உட்பட ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி நிகழ்ச்சி காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
The post ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பயிற்சி பெறுவது மிகவும் மகிழ்ச்சி வரும் காலங்களில் முப்படைகளிலும் பெண்கள் அதிகம் இணைவார்கள்: குன்னூரில் நடந்த விழாவில் ஜனாதிபதி நம்பிக்கை appeared first on Dinakaran.