×
Saravana Stores

திருப்பூர்-கோவை எல்லையில் வேளாண் விளைநிலங்களை சேதப்படுத்தும் புள்ளிமான்கள்: வனப்பகுதியில் விட விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட எல்லையை ஓட்டியுள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் புள்ளிமான்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பனியன் தொழிலில் சிறந்து விளங்கினாலும், அதற்கு இணையாக விவசாயமும் உள்ளது. இதுதவிர, பல்வேறு காய்கறிகள், தக்காளி, வாழை, மக்காச்சோளம் ஆகியவை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். கவுசிகா மற்றும் நொய்யல் ஆற்றுப்படுகை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீர்நிலைகளில் வசிக்கும் புள்ளிமான்களால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு புள்ளமான்கள் வசிக்கும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல. விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு இடங்களை ஒட்டியுள்ள பகுதிகள் கூட்டம் கூட்டமாக இந்த புள்ளிமான்கள் வசித்து வருகின்றது.

குறிப்பாக, திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தெக்கலூர், சாமந்தன்கோட்டை, கோதைபாளையம், புதுப்பாளையம், நல்லகட்டிபாளையம், நாதம்பாளையம் மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து புள்ளிமான்கள் பயிர்களை சேதப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மான்கள் அடிக்கடி சாலை விபத்துகளிலும் இறக்கின்றன. தெருநாய்களாலும் வேட்டையாடப்படுகின்றன. எனவே, இங்குள்ள புள்ளிமான்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் கூறுகையில்,“புற்களை சாப்பிட்டு மான் உயிர் வாழ்கிறது. மான்களை புலி, சிறுத்தை, சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. இது தான் உணவு சங்கிலி. ஆனால் புள்ளிமான்கள் இந்த பகுதிகளுக்கு வழிதவறி வந்து விட்டது.

இந்த புள்ளிமான்களை சாப்பிடும் அளவிற்கான விலங்குகள் இங்கு இல்லை. அதனால், புள்ளிமான்கள் பெருகுகிறது. இப்படி பெருகும் புள்ளிமான்கள் விவசாய நிலங்களை அளிக்கிறது. ​​இந்த புள்ளிமான்கள் வாழை, மக்காச்சோளப்பயிர்களை அதிகளவில் சேதப்படுத்துகின்றன. ஒரு வாழை நடவு செய்ய சுமார் 25 ரூபாய் செலவாகும். ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாழை சாகுபடி செய்கிறோம். ஆனால், அந்த பயிர்களில் ஒரு பகுதி மான்களால் சேதப்படுத்தப்படுகிறது. வாழை மரத்தை சேதப்படுத்தி வாழைக்காயை சாப்பிட்டு விட்டு செல்கிறது. குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பயிர்களை சேதப்படுத்துகின்றது. பயிர்களை எங்களால் எப்போதும் கண்காணிக்க முடிவதில்லை. அதனால், புள்ளிமான்களை பிடித்து கொண்டு போய் வனப்பகுதிக்குள் விட வேண்டும். அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் புள்ளிமான்கள் விளை நிலங்களை தாண்டி ரோட்டில் வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே, வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றார். இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரி தேவேந்திரகுமார் மீனா கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தில் நொய்யல் ஆற்றில் புள்ளிமான்கள் அடித்து வந்தது. அந்த புள்ளிமான்கள் வஞ்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிபெயர்ந்துள்ளது. அருகில் வனப்பகுதிகள் இல்லாததால் அருகாமையில் உள்ள தோட்டங்களில் உலா வருகிறது. இந்த ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் மான்களின் எண்ணிக்கை மற்றும் மீட்பு வாகனங்களை கோருவதற்கு ஒரு நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். மான்கள் கணக்கெடுப்பு நடத்தி அதற்கான அறிக்கை 1 அல்லது 2 மாத்திற்குள் சமர்ப்பிப்பார்கள். தொடர்ந்து புலிகள் காப்பகப் பகுதிக்கு மாற்றுவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பூர்-கோவை எல்லையில் வேளாண் விளைநிலங்களை சேதப்படுத்தும் புள்ளிமான்கள்: வனப்பகுதியில் விட விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur-Goa border ,Tiruppur ,Tiruppur district ,Tirupur-Goa ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 3 பேரை கொலை செய்து வீட்டில் திருட்டு