*விஜிலென்ஸ் போலீசார் அதிரடி
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா மகன் முருகேசன் (35). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது முருகேசனிடம், பள்ளப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை (42), விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்ஐ மஞ்சுநாத் மற்றும் போலீசார் ஸ்ரீதர், ரவி ஆகியோர் நேற்று முருகேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்து விஏஓவிடம் தர அனுப்பியுள்ளனர்.
இதை பெற்றுக்கொண்ட முருகேசன், விஏஓ தம்பிதுரையிடம் பணம் கொடுத்தபோது உதவியாளரிடம் கொடுக்க கூறியுள்ளார். இதையடுத்து உதவியாளர் புஷ்பா (40) என்பவரிடம் பணம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்றனர். வாரிசு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்த சம்பவம் பள்ளப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வாரிசு சான்றிதழ் வழங்க ₹4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ, உதவியாளர் கைது appeared first on Dinakaran.