×
Saravana Stores

வக்பு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்: மக்களவை சபாநாயகரிடம் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்

சென்னை: வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகரிடம் திமுக எம்பிக்கள் நேற்று நேரில் வலியுறுத்தினர். திமுக எம்பிக்கள் ஆ.ராசா, புதுகை எம்.எம்.அப்துல்லா மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் ஒன்று அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: வக்பு சட்டத்திருத்த மசோதா மீது ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் எனக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறோம். ஆகஸ்ட் 22 அன்று முதல் கூட்டம் நடந்த நிலையில், இதுவரை 25 அமர்வுகள் மட்டுமே நடந்துள்ளன. அவற்றில், இதற்கு தொடர்பில்லாத அமைப்புகள் சான்றுகளையும், கோரிக்கைகளையும் அளித்தவையும் அடக்கம்.

அதேவேளையில், பீகார், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இன்னும் இந்த குழுவிடம் தங்கள் அறிக்கையை அளிக்கவில்லை. மேலும், தொடர்புடைய பல அமைப்புகள் இக்குழுவிடம் தங்கள் கருத்துகளை தெரிவிக்க நேரம் கோரி வருகின்றனர். வக்பு சட்டத் திருத்த மசோதா என்பது தற்போதைய சட்டத்தில் பல பெரிய மாற்றங்களைக் கொண்டுள்ள மிகவும் விரிவான சட்டம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் இந்திய மக்கள்தொகையில் பெரும்பிரிவினரை பாதிக்கக் கூடியவை. ஆகவே, இக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள மூன்று மாத காலம் என்பது போதாது என்பது மட்டுமின்றி, அது தவறான பரிந்துரைகளை அளிக்க வழிவகுத்துவிடும் அபாயமும் உள்ளது.

முறையான கலந்துரையாடல் மற்றும் ஆய்வு மேற்கொள்ள இக்குழுவுக்கு நியாயமான அளவு காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் கருத்துகளைக் கூற வாய்ப்பு வழங்காமல். சட்டங்கள் வெறும் சம்பிரதாயத்துக்கு விவாதிக்கப்பட்டால், அது சட்டமியற்றும் வழிமுறையின் சட்டத் தகுதியையே பாதிக்கும். இது நாடாளுமன்றத்தின் மாண்புக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post வக்பு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்: மக்களவை சபாநாயகரிடம் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Parliamentary Joint Committee ,Dimuka ,Speaker ,Lok Sabha ,Chennai ,MLAK ,Speaker of ,Dimuka Mbikal A. Raza ,Budhukai M. M. Abdullah ,Demuka MBIK ,Dinakaran ,
× RELATED வக்பு சட்டத்திருத்த மசோதா...