சென்னை: மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பிளமிங்கோ, கழுகு, பெலிகன் மற்றும் மயில் ஆகிய 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், பூமிக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கப்பட்டு கச்சேரி சாலை வழியாக மயிலாப்பூரை கடந்த மாதம் வந்தடைந்தது.
பின்னர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் தோண்டப்பட்டு இறுதியாக மே 2026ல் போட் கிளப்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுரங்கம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: மெரினா கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை கடினமான புவியியல் நிலைமைகள் உள்ளதாலும், தொடர்ச்சியாக துளையிடுவதாலும் இயந்திரங்களில் தேய்மானம் ஏற்பட்டு பழுதாகிறது.
இயந்திரத்தின் முக்கிய பகுதியான டிஸ்க் கட்டர்களை ஒருமுறை பழுது ஏற்பட்டால் அதனை மாற்றுவற்கு 3 முதல் 10 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இதனிடையே கலங்கரை விளக்கம் முதல் மயிலாப்பூர் வரை கடற்கரை மண் நிலப்பரப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் இடையே கடினமான பாறைகள் உள்ளன. இவ்வாறான வெவ்வேறு நிலத்தன்மையின் காரணமாக இயந்திரங்கள் கோளாறு ஏற்படுகிறது. இதனால் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதர பணிகள் தடையின்றி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.
The post இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.