இந்த கால்வாய்களில் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகள் தேக்கம் காரணமாக மழைக்காலங்களில் தண்ணீர் கடலுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் ஓட்டேரி நல்லா கால்வாய் முக்கியமான ஒன்றாக உள்ளது. லூக்காஸ் டிவிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் இந்த கால்வாய் வழியாக கடலில் கலக்க வேண்டும்.
ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு முந்தைய அண்ணாநகரில் உள்ள கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை, குமாரசாமி நகர், அண்ணாநகர் மேற்கு வழியாக, ஓட்டேரி நல்லா கால்வாயில் சேர்வதற்கு முன், 2 கி.மீ., தூரத்துக்கு டி.வி.எஸ் கால்வாய் பாய்கிறது.
3 மீட்டர் அகலமுள்ள டிவிஎஸ் கால்வாயை, டி.வி.எஸ் லூக்காசுக்கு முன்பாக பாடி குப்பம் கால்வாயை நோக்கி, ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு திருப்புவதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றபட்டால், மழை காலங்களில் அண்ணாநகர் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் தேங்குவதை தடுக்க உதவும். இது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவும் உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கால்வாய்களை அறிவியல் பூர்வமாக தூர்வாரும் பணியை மேம்படுத்துவதற்காக ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து சென்னை மாநகராட்சி புவியியல் அளவீட்டு ஆய்வை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அண்ணாநகரில் உள்ள கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாயை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தம் 1,221.32 மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. விரைவில் அண்ணா நகரில் உள்ள கால்வாயை, பாடி குப்பம் கால்வாயில் திருப்புவதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது appeared first on Dinakaran.