கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரிக்கு நியமன பணியிடங்கள் இந்துக்களுக்கு மட்டுமே என்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 26: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிதியில் கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தொடங்க இந்து சமய அறநிலையதுறை முடிவு செய்தது. அந்த கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை தேர்வு செய்ய நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து கடந்த 2021ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், இந்து மதத்தை சர்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்தும், இந்த அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரியும் சுகைல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனமாகும். அந்த கல்லூரி மத நிறுவனம் அல்ல. கல்வி நிறுவனத்தில் மத அடிப்படையில் எந்த பணி நியமனங்களுக்கு மேற்கொள்ள முடியாது. எனவே, தன்னை நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அறநிலைய தரப்பில், இந்து சமய அறிநிலைய துறை சட்டப்படி, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் நிதியில் இருந்து கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அரசிடம் நிதி உதவி எதுவும் பெறப்படவில்லை. இது சுயநிதி கல்லூரியாகும். கோயில் சார்பில் நடத்தப்படுவதால் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரிக்கு ஊழியர்களை நியமிக்க அறநிலையத்துறைக்கு தனி உரிமை உள்ளது. எனவே, பணி நியமனங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவில் நிதியில் இருந்து நடத்த படும் சுயநிதி கல்லூரி என்பதால், இந்து அறநிலையத் துறை சட்டப்படி, இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரிக்கு நியமன பணியிடங்கள் இந்துக்களுக்கு மட்டுமே என்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: