சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது. பேரவைக் கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 2024ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் பிப்ரவரி 20ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றதால், தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும் நடைபெறும் மானிய கோரிக்கை கூட்டம், தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் 2024-2025ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையை தாக்கல் செய்வதற்காக கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி தொடங்கி ஜூன் 29ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வேண்டி இருப்பதால், வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தை வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டி உள்ளேன். சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்.
அலுவல் ஆய்வு குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர, என் விருப்பத்துக்கு நான் 100 நாட்கள் கூட்டம் நடத்தப்போகிறேன் என்று சொல்ல முடியாது. சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போதுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த பிறகுதான், நேரடி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். டிசம்பர் 9ம் தேதி (திங்கள்) கூடும் சட்டப்பேரவைக் கூட்டம் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
The post தமிழக சட்டப்பேரவை டிச. 9ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.