×
Saravana Stores

சீமானை விட்டு விலகியவர்கள் புதிய அமைப்பு தொடங்கினர்: திருச்சியில் 27ம் தேதி போட்டி பொதுக்கூட்டம் நடத்த முடிவு

சென்னை: சீமானை விட்டு விலகியவர்கள் புதிய அமைப்பு தொடங்கியுள்ளனர். சீமானின் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கல்யாணசுந்தரம் அதிமுகவிலும், ராஜீவ்காந்தி திமுகவிலும் சில ஆண்டுகளுக்கு முன்பே இணைந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் சில முக்கிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் 8 சதவீதம் வாக்கு கிடைத்ததோடு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஆனால், சீமானின் செயல்பாடுகள் காரணமாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்து அக்கட்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக விலகி வருகின்றனர். சீமான் கட்சியில் தன்னிச்சையாக செயல்படுவதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். முள்ளிவாய்க்கால் சம்பவம் தொடர்பாக சீமான் திமுக மற்றும் காங்கிரசை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவோ, விடுதலை புலிகள் மீதான தடையே நீக்கவோ அவர் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் முதலில் கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் பிரபாகரன் தலைமையிலான நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் முத்த தலைவர் வியனரசு தனியாக செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், புகழேந்தி மாறன், தனசேகரன் ஆகியோரும் அக்கட்சியில் இருந்து ஏற்கனவே விலகினர். இந்த நிலையில் சீமான் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் புதிய அமைப்பை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி நாம் தமிழர் கட்சியின் மாநில முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், புகழேந்தி மாறன், தனசேகரன் ஆகியோர் “தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்” என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வருகிற 27ம் தேதி சிதம்பரத்தில் மாவீரர் தின பொதுக்கூட்டத்தை சீமான் தலைமையில் பிரமாண்டமாக நடத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். அதே நாளில் திருச்சியில் சீமான் கட்சிக்கு போட்டியாக மாவீரர் பொதுக்கூட்டத்தை நடத்த அக்கட்சியில் இருந்து விலகி தனி அமைப்பை தொடங்கிய தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். அந்த மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மேலும் அந்த பொதுக்கூட்டத்துக்கு சீமானுக்கு போட்டியாக தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனை அழைத்து வந்து பங்கேற்க வைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

The post சீமானை விட்டு விலகியவர்கள் புதிய அமைப்பு தொடங்கினர்: திருச்சியில் 27ம் தேதி போட்டி பொதுக்கூட்டம் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Seaman ,Trichy ,CHENNAI ,Naam Tamilar Party ,Seeman ,Naam Tamil party ,Kalyanasundaram AIADMK ,Rajiv Gandhi ,DMK ,
× RELATED சீமானால் தனது உயிருக்கு ஆபத்து...