×
Saravana Stores

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டாவில் அதீத மழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடையும் என்பதால் நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யத்தொடங்கும். படிப்படியாக இந்த மழை வலுப்பெற்று 30ம் தேதி வரை வட மாவட்டங்களிலும் அதீத மழையாக மாறும் வாய்ப்புள்ளதால், வெள்ள பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியுள்ளது.

இது இ ன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தொடர் கன மழை, மிக கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தை நெருங்கி வரும்போது டெல்டா மாவட்டங்கள் வட தமிழக மாவட்டங்களில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும். நிலநடுக்கோடு- தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலையில் இலங்கைக்கு தென்கிழக்கே 500 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்துக்கு 950 கிமீ, சென்னை 1175 கிமீ தொலைவில் நிலை கொண்டு இருந்தது. அது தமிழக கடலோரப் பகுதி நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலையில் நாகை, திருவாரூர். தஞ்சை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யத் தொடங்கியது. பிறகு இன்று அதிகாலையில் நாகப்பட்டினத்துக்கு 650 கிமீ தொலைவில் வரும் போது சென்னை, முதல் தென் மாவட்டங்கள், ராமநாதபுரம் மாவட்டம் வரை மழை பெய்யத் தொடங்கும். உள் மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி முதல் தேனி மாவட்டம் வரையில் மழை பெய்யும், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யத் தொடங்கும்.

மேலும் நாளை மதியத்துக்கு பிறகு வேதாரண்யத்துக்கு அருகில் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யத் தெடங்கும். அதே நேரத்தில் திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரையிலும், உள் மாவட்டங்களில் சேலம், கரூர், திண்டுக்கல் வரையும் தொடர் கனமழை பெய்யும். விழுப்புரம்- ராமநாதபுரம் வரையில் உள்ள இடைப்பட்ட பகுதியில் தொடர் மிக கனமழை பெய்யும். நாளை வேதாரண்யத்துக்கு தென் கிழக்கே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு, தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கும்.

சென்னை முதல் ராமநாதபுரம் வரையும், உள் மாவட்டங்களில் திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வரையும் இடைப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்யும். இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் மழை நீடித்துக் கொண்டே இருக்கும். பின்னர் இந்த நிகழ்வு 29ம் தேதி டெல்டா மாவட்டத்தை நெருங்கி வலுவிழக்கும் வரையில் மழை நீடித்துக் கொண்டே இருக்கும். புதுச்சேரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.

நவம்பர் 26ம் தேதி முதல் 29ம் தேதி முடிய நான்கு நாட்களுக்கு தொடர் கனமழை பெய்யும். ஓரிரு நாளில் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் ஓரளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் வழியாக உள் மாவட்டங்களில் உபரி நீர் திறக்கும் வகையில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர மாவட்டங்களிலும் வெள்ளம் பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது வலுவிழந்த நிலையில் கடக்கும் என்பதால் காற்று பாதிப்பு இருக்காது என்பதால் காற்று குறித்து அச்சம் தேவையில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு 3மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டனத்துக்கு 850 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு இலங்கை தமிழக கடலோரப் பகுதிக்கு நகரும். அதன் தொடர்ச்சியாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

26ம் தேதியில் திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். விழப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். 27ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், டெல்டா மாவட்டங்களில் மற்றும் அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். 28ம் தேதி காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

கடலூர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப் பேட்டை சென்னை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 29ம் தேதி சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரையில் 327 மிமீ பெய்துள்ளது.

இந்த கால கட்டத்தில் இயல்பு மழை 331 மிமீ பெய்வது வழக்கம். தற்போது வங்கக் கடலில் வலுப்பெற உள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அறிவிக்கப்படும். எதிரெதிர் திசையில் நகரும் நிகழ்வுகள் நடப்பதால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் 5 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்.

* பனி விலகும்.. மழை பொழியும்..
அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். பனி விலகி அரபிக் கடல் பக்கம் போய்விடும். பசிபிக் கடல் பகுதியில் இருந்து வரும் வெப்ப நீராவியும், வியட்நாம், கம்போடியா வழியாக வரும் குளிர் நீராவியும் நிலநடுக்கோட்டின் இந்தியப் பகுதியின் தென் அரைக்கோள பகுதியில் இருந்து வரும் வெப்ப நீராவியும் இணைந்து தமிழகத்தில் அதீத மழையை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளை பனி முற்றிலும் விலகி மழை பெய்யத் தொடங்கும்.

The post தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டாவில் அதீத மழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Bay of Bengal ,Delta ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது