விழுப்புரம், நவ. 26: யாசகம் மூலம் கிடைத்த ₹10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு முதியவர் வழங்கினார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் (75) என்பவர் யாசகம் மூலம் சேமித்த ₹10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். குறைகேட்பு கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த அதிகாரிகளிடம் சென்று அப்பணத்தை வழங்கிவிட்டு வெளியே வந்த அவர் கூறுகையில், தனது மனைவி இறந்த பின் பொதுச்சேவையில் ஈடுபட விரும்பி யாசகம் பெற்று, அதன்மூலம் கிடைக்கப்பெறும் பணத்தை பள்ளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வருகிறேன். மேலும் ஊர், ஊராக சென்றும் யாசகம் மூலம் பணத்தை சேமித்து பள்ளி கூடங்களுக்கு நன்கொடடையாக வழங்கி வருகிறேன். ஏற்கனவே விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை வழங்கியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அந்த பணமானது முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அரசு ஊழியர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
The post விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழ்ச்சி யாசகம் மூலம் கிடைத்த ₹10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர் appeared first on Dinakaran.