கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குளம் அமைக்கும் பணி 70% நிறைவு: அதிகாரி தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது வேளச்சேரி, அடையாறு, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே அந்த பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு அதிக நாட்களாவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட 168 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், 4 குளங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

300 அடி அகலமும் 100 அடி நீளமும், 22 அடி ஆழமும் கொண்ட 4 குளங்களில் 9 கோடியே 80 லட்சம் லிட்டர் நீரை சேமிக்க முடியும் என்றும், இதில் அமைக்கப்படும் 4 குளங்களும் ஒன்றோடு ஒன்று இணைப்பில் உள்ள வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதால், அடுத்த வாரம் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘இம்மாத இறுதிக்குள் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 4 குளங்களும் தயாராகி விடும். தற்போது 70 சதவீதத்திற்கும் மேலான பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த குளங்கள் பயன்பாட்டிற்கு வந்ததும் கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை தடுக்கப்படும்.

கொட்டி தீர்க்கும் கனமழையால் நிரம்பும் அதிகப்படியான நீர் இந்த குளங்களில் சேமித்து வைக்கப்படும். இங்கு புதிதாக உருவாக்கப்பட்டு வரும் நான்கு குளங்களும் தலா 3 ஆயிரம் சதுர மீட்டர் கொண்டது. ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் சதுர மீட்டர் ஆகும். ஒவ்வொன்றும் 10 அடி ஆழம் கொண்டது. 1.5 லட்சம் கன மீட்டர் தண்ணீரை சேமித்து திறன் பெற்றது. பருவமழை சமாளிக்கும் கிண்டி ரேஸ் கோர்ஸ் குளங்கள் பெரிதும் உதவும்,’’ என்றார்.

The post கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குளம் அமைக்கும் பணி 70% நிறைவு: அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: