லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பரேலி – பதாவுன் மாவட்டங்களை இணைக்கும் ராம்கங்கா ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், அந்த பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் மீட்புக் குழுவினர் உதவியுடன் முடிக்கப்படாத பாலத்தின் சாலையில் இருந்து கீழே விழுந்து மணலில் கிடந்த காரையும், காருக்குள் உயிரிழந்த நிலையில் இருந்த மூவரது சடலத்தையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ததகஞ்சில் இருந்து பரித்பூருக்கு சென்று கொண்டிருந்த காரின் டிரைவர், பாலம் கட்டுமானப் பணிகள் நடப்பதை அறிந்திருக்கவில்லை. அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், பாதி முடிக்கப்பட்ட பாலத்தின் சாலையில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கிட்டத்தட்ட பாலத்தில் இருந்து 25 அடி கீழே விழுந்து 3 பேர் பலியாகினர். உயிரிழந்த மூவரும் மைன்புரியில் வசிக்கும் கௌஷல் குமார், விவேக் குமார் மற்றும் அமித் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கூகுள் மேப்பை பார்த்து, இந்த பாலத்தில் பயணம் செய்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலம் விழுந்தது. அதன்பின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தன’ என்றனர்.
The post அரைகுறை பாலத்திலிருந்து கார் கவிழ்ந்தது கூகுள் மேப்பை நம்பி சென்ற 3 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம் appeared first on Dinakaran.