×
Saravana Stores

காற்று தரம் மேம்பட்டதால் டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் காற்று தரம் மேம்பட்டதால் பள்ளி,கல்லூரிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் காற்று தரம் மோசம் அடைந்து கடுமை தரத்தை அடைந்ததால் பள்ளி, கல்லூரிகளை மூட நவ.18ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தியது. அதே போல் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பாதிக்கும் மேல் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காற்று தரம் மேம்பட்டுள்ளது.

நேற்று காற்று தரப்புள்ளி 285 பதிவாகி மோசம் தரத்தில் இருந்தது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பெற்றோர்கள் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசுவாமி, ‘மதிய உணவை நம்பியிருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகள் மூடப்பட்டதால் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். மேலும் பல மாணவர்களுக்கு வீட்டில் ஆன்லைன் முறையில் கல்வி கற்க வசதியில்லை.

காற்று சுத்திகரிப்பு கருவிகள் இல்லை’ என்று அவர் வாதிட்டார். இதையடுத்து டெல்லியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதோடு டெல்லியில் காற்றின் தரம் கடுமை நிலைக்கு செல்ல காரணமாக இருந்த டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post காற்று தரம் மேம்பட்டதால் டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,New Delhi ,Dinakaran ,
× RELATED அரசியலமைப்பின் முகவுரையில்...