ரூ.2,100 கோடி லஞ்ச புகாரில் அதானி, மருமகன் சாகருக்கு அமெரிக்க வாரியம் நோட்டீஸ்: 21 நாளில் பதிலளிக்க கெடு

நியூயார்க்: சூரிய மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்க ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில், அதானி குழு தலைவருக்கும், அவரது மருமகன் சாகருக்கும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்தியாவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதற்காக, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் ரூ.2,100 கோடியை அதானி குழுமம் பெற்றதாக நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி அவரது மருமகன் சாகர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இந்நிலையில், அதானிக்கும், அவரது மருமகன் சாகருக்கு நீதிமன்றம் மூலமாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நவம்பர் 21 தேதியிடப்பட்ட அந்த நோட்டீசில், ‘இந்த சம்மன் கிடைக்கப்பட்ட 21 நாட்களில் குற்றச்சாட்டு குறித்து உங்கள் தரப்பு விளக்கத்தை, நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பதிலளிக்க தவறினால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பதிவு செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உங்கள் தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகப் போவதாக அதானி குழுமம் கூறியிருப்பதால், விரைவில் பதில் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரூ.2,100 கோடி லஞ்ச புகாரில் அதானி, மருமகன் சாகருக்கு அமெரிக்க வாரியம் நோட்டீஸ்: 21 நாளில் பதிலளிக்க கெடு appeared first on Dinakaran.

Related Stories: