ஊட்டி,நவ.23: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு ஊட்டி நகரில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 27ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம், ஊட்டி வருகிறார். ஊட்டி உள்ள ராஜ்பவனில் தங்கும் அவர், 28ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள டிஎஸ்எஸ்சி., சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
29ம் தேதி நீலகிரி வாழ் பழங்குடி மக்களை சந்திக்க உள்ளார். 30ம் தேதி திருவாரூர் மாவட்டம் செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சியை முடித்த பின் அன்று மாலை திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
3 நாட்கள் ஊட்டியில் தங்க உள்ள நிலையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முதல் படகு இல்லம், ஹில்பங்க், கலெக்டர் அலுவலகம், தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஊட்டி கலெக்டர் அலுவலக பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளங்கள்,குழிகள் மூடப்பட்டு தார் ஊற்றி பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டு வருகின்றன.
The post குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு ஊட்டி நகரில் சாலைகளில் பேட்ஜ் ஒர்க் பணி தீவிரம் appeared first on Dinakaran.