×
Saravana Stores

ஜோ பைடனை தொடர்புபடுத்தி மோடியை விமர்சித்த ராகுல் காந்தி: சோனியாவுக்கு மருத்துவர் அமைப்பு கடிதம்

டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்ற கருத்துடன் மோடியை விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் கடந்த 16ம் தேதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, `அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ராகுலின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தாயாரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்திக்கு தேசிய மருத்துவர் அமைப்பு (பாரத்) கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், ‘பொது மேடையில் தலைவர்கள் குறித்த இதுபோன்ற அறிக்கைகளோ விமர்சனங்களோ, தவறான தகவல்களை நிலைநிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் புரிதல், சிகிச்சை மீதான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் பைடனின் அறிவாற்றல் திறன்களை இழிவுபடுத்துவதுபோல் வெளிப்பட்ட ராகுல் காந்தியின் கருத்துக்கள் கவலையை அளிக்கிறது. தன்னை விட மூத்தவர் மற்றும் வயதான அரசியல் தலைவர் குறித்து ராகுல் இவ்வாறான கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இந்திய கலாசாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதியற்ற தன்மையைக் குறிக்கின்றன.

இது தனிநபர் மீதான தனிப்பட்ட அவமரியாதை மட்டுமல்ல; இந்தியாவில் சுகாதாரச் சவால்களை எதிர்த்து வாழும் எண்ணற்ற மூத்த குடிமக்கள் மீதான அவமரியாதையாகும். உங்கள் மீதும் கூட இதுபோன்று உடல்நிலை குறித்த வதந்திகள் சில சமயங்களில் வந்திருக்கும். ஒரு தனிநபர் மீது இவ்வாறான கருத்துகள் சமூகத்தில் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, தனது கருத்துகளைப் பற்றி ராகுல் சிந்திக்க வேண்டும்; மேலும், அவர் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற கருத்துகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஜோ பைடனை தொடர்புபடுத்தி மோடியை விமர்சித்த ராகுல் காந்தி: சோனியாவுக்கு மருத்துவர் அமைப்பு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Joe Biden ,Sonia ,Delhi ,National Physician Organisation ,US President ,Modi ,Maharashtra ,Amravati ,
× RELATED சொல்லிட்டாங்க…