மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடிவிட்டு பிரகாஷ் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலை ஓட்டலில் இருந்து புகை வந்தது. திடீரென தீப்பற்றி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. தாபா கீற்று கொட்டகை என்பதால் முழுவதும் தீ பரவியது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் தாபாவின் கூரை, டேபிள் சேர்கள், மளிகை பொருட்கள், பீர் வைக்க பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது. ஓட்டலில் இருந்த 6 சிலிண்டர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும். இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் தீவைத்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தாபா ஓட்டல் அருகில் லாரி பட்டறைகள் பள்ளி மற்றும் அலுவலகங்களும் உள்ளன. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post மேட்டூர் அருகே இன்று அதிகாலை தாபா ஓட்டலில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.